Sunday, September 28, 2014

G... 2G... 3G... 4G...

தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின் சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும்.இவ்வாறு மாற்றப்பட்ட சைகைகள் ஒயரின் வழியாக அனுப்பப்பட்டும், பெறப்பட்டும் வந்தன.

ஆனால் செல்போன்களில் ஒயர்களை பயன்படுத்த முடியாத காரணத்தால், நம் ஒலி சைகைகள் உலகம் முழுவதும் வியாபித்துள்ள, கண்ணுக்கு தெரியாத ரேடியோ அலைகளின் முதுகில் ஏற்றி விடப்படுகின்றன.

வானுயர்ந்த செல்போன்டவர்களும், வானத்தில் மிதக்கும் செயற்கைகோள்களும் (சேட்டிலைட்டுகளும்) இந்த குறிப்பிட்ட பண்புடைய ரேடியோ அலைகளை நாடு முழுவதும் பரவச் செய்யும்.

மறுமுனையில் இருக்கும் செல்போனானது இவ்வாறு பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளை இனம்கண்டு, அவற்றை ஒலிசைகளாக மாற்றி (முதுகில் இருந்து இறக்கி), நமக்கு எதிர்முனையில் இருப்பவர் பேசுவதை கேட்கச் செய்யும்.

இதில் நம் பேச்சு ரேடியோ அலைகளாக மாற்றப்படுவதை டிரான்ஸ்மிட்டிங் என்றும், எதிர்முனையில் இருந்து கேட்கும் நிலையை ரிசீவர் என்று அழைப்பர். செல்போன்களில் ஒரே நேரத்தில் பேசவும்கேட்கவும் முடியும். இதனால் இவற்றை டிரான்ஸ்-ரிசீவர் என்று அழைப்பர்.

முந்தைய தலைமுறை காவல்துறை வயர்லெஸ்கள், ஒரு நேரத்தில் டிரான்ஸ்மீட்டர்களாகவோ அல்லது ரிஸிவர்களாக மட்டுமே செயல்படும்.

இதனாலேயே ஒவ்வொரு உரையாடல் முடிந்த பின்னும் ஓவர் என்று சொல்லி, டிரான்ஸ்மிட்டரை ரிஸிவர் நிலைக்கு மாற்றி பதிலுக்காக காத்திருப்பர்.ஆரம்ப நாட்களில் ஒலி சைகைகளானது மின்சைகைகளாக மாற்றப்பட்டு ரேடியோ அலைகளின் மீது ஏற்றப்பட்டன. அதிக துல்லியம் மற்றும தகவல் (டேட்டா) பரிமாற்றத்திற்காக ஒலி சைகைள் டிஜிட்டல் எனப்படும் 0 மற்றும் 1 என்ற சைகைகளாக மாற்றப்பட்டு, ரேடியோ அலைகளின் மீது ஏற்றப்பட்டன. சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்த டிஜிட்டல்வழித்தடத்தின் அகலம் அதிகரிக்கப்பட்டது. (நம் ஊர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படுவதைப் போன்று). இந்த அகல வழிப்பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.இதில் மின்சைகளாக அனுப்பட்ட நிலையானது முதல் தலைமுறை (1ஆம் ஜெனரெஷன்) ஆகும்.

மின்சைகைகள் டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்ட மாற்றமானது இரண்டாம் தலைமுறை (2ஆம் ஜெனரேஷன்) (2ஜி) ஆகும்.

பாதையின் அகலம் விரிவுபடுத்தப்பட்ட நிலையானது மூன்றாம் தலைமுறை (3ஆம் ஜெனரேஷன்) (3ஜி)ஆகும்.

மேலும் பாதை விரிவுபடுத்தப்படவிருக்கும் நிலையானது 4ஆம் ஜெனரேஷன் (4ஜி) ஆகும்.இதில் முதல் தலைமுறை போன்களில் பேச்சு பரிமாற்றம் மட்டுமேசெய்ய இயலும்.

இரண்டாம் தலைமுறை போன்களில் பேச்சு பரிமாற்றத்துடன், குறைந்த வேகமுடைய (256கே.பி.பி.எஸ் எல்லைக்குள்) தகவல் (இணைய) பரிமாற்றம் செய்ய இயலும்.

மூன்றாம் தலைமுறையின் இணைய வேகமானது 3.2எம்.பி.பி.எஸ், 7எம்.பி.பி.எஸ் மற்றும் 21எம்.பி.பி.எஸ் என்று வளர்ந்து வந்துள்ளன. இத்தகைய உயர்வேகத்தின் காரணமாக, அதிக வேக இண்டர்நெட் பயன்பாடு மட்டுமின்றி, நொடிப்பொழுதில் போட்டோக்களையும், வீடியோக்களையும் இரண்டு போன்களுக்கிடையே அனுப்ப இயலும். இதன் பயனாகவே வீடியோ கால் எனப்படும், முகம் பார்த்து பேசும் வசதி, 3ஜி போன்களில் இன்று சாத்தியமாகி உள்ளது.

Tuesday, September 23, 2014

சுடும் நிஜம்

சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கான முதல் வேலை, அதைப்பற்றி அறிந்து கொள்வதுதான்.

இதோ, நமது சுற்றுச்சூழல் பற்றி அதிர்ச்சியடைய வைக்கும் சில உண்மைகள், சில மாற்று வழிகள்:#

ஒவ்வொரு நிமிடத்துக்கும் 100 ஏக்கர் மழைக்காடுகள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

# நாளிதழ்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 25 கோடி மரங்களைக் காப்பாற்ற முடியும்.

# அமெரிக்க நிறுவனங்கள் ஓராண்டில் பயன்படுத்தும் காகிதத்தை மட்டும் வைத்துப் பூமிப் பந்தை மூன்று முறை சுற்றிவிடலாம்.

# நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 கோடி கிலோ குப்பை உருவாகிறது. அப்படியென்றால், ஆண்டுக்குச் சராசரியாக 3650 கோடி கிலோ குப்பை.

# கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் 10 லட்சம் கடல் உயிரினங்கள் ஆண்டுதோறும் இறந்துபோகின்றன.

# சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பதில் ஒரு இந்தியரைப் போல 35 மடங்கும், வங்கதேசத் தவரைப் போல 140 மடங்கும், ஆப்பிரிக்கரைப் போல 250 மடங்கும் ஓர் அமெரிக்கர் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கிறார்.

# வளர்ந்த, பணக்கார நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தை, வளர்ந்துவரும் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தையைப் போல 40 மடங்கு அதிகப் பொருட்களை வாங்குகிறது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

# ஒரு கண்ணாடி குடுவையோ, புட்டியோ முழுமையாக மக்கிப் போக 4,000 ஆண்டுகள் ஆகும். அதனால் உடையும்வரை கண்ணாடிப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

# அலுமினியப் பாத்திரங்களைக் காலாகாலத்துக்கும் மறுசுழற்சிசெய்து பயன்படுத்திக்கொண்டே இருக்க முடியும். அதேநேரம் உணவுப்பொருட்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல.

# குளிர்பானங்கள், மற்றப் பொருட்கள் அடைக்கப்பட்டுவரும்அலுமினியக் குவளையை மறுசுழற்சி செய்வதன் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தால், ஒரு டிவியை மூன்று மணி நேரத்துக்கு இயக்க முடியும்.

Wednesday, September 17, 2014

தட்டான் பூச்சி

உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள். தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள்.

# ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள்.

# தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

# தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள், ஆறு கால்கள், தலை, வயிறு, மார்பு உண்டு.

# தட்டான் பூச்சியின் உறுப்புகளிலேயே அதன் வயிறுதான் நீளமானது. அது அறை, அறையாகப் பிரிக்கப்பட்டது.

# ஆறு கால்கள் இருந்தாலும் தட்டானால் நன்றாக நடக்க முடியாது.

# தட்டான்களால் வேகமாகப் பறக்க முடியும். பின்னோக்கியும் 50 கி.மீ. மைல் வேகத்தில் பறக்கும்.

# நீரில் வாழும் சிறு உயிரினங்களைத் தட்டான்கள் உணவாக உட்கொள்கின்றன. பெரிய உடல் கொண்ட தட்டான்கள் தலைப்பிரட்டைகள், மீன் குஞ்சுகளையும் சாப்பிடும். காற்றில் பறந்துகொண்டே கொசு, ஈ, பறக்கும் சிறு பூச்சிகளையும் தட்டான்கள் சாப்பிடும்.

# தட்டான்கள் நீர்ப் பகுதிகளுக்கு அருகில் வாழ்பவை. பெண் தட்டான்கள் முட்டைகளை நீரின் மேற்பரப்பிலேயே இடும். நூறு முதல் சில ஆயிரம் வரையிலான முட்டைகளை நீரிலோ, நீருக்கு அருகில் உள்ள பகுதிகளிலோ இடும்.முட்டைகள் பொரிய ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளும்.

# தட்டானின் இளம்புழுப் பருவம் நீரிலேயே கழியும். அதற்கு இறக்கைகள் இருக்காது. நீரில் மீன்களைப் போல் செவுள்களால் சுவாசிக்கும்.

# இளம்புழுவாக இருக்கும்போது ஒன்பது முதல் 17 முறை தோலுரித்த பிறகு தட்டான் தண்ணீரிலிருந்து வெளியே வரும். பின்னர் சிறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கிவிடும்.

# இளம்புழுப் பருவத்திலிருந்துநிலத்துக்கு வரும் பருவத்தில் சிறகுகள் முளைக்காமல் இருக்கும் தட்டான்களில் 90 சதவீதத்தை பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் சாப்பிட்டுவிடும்.

# மற்ற பூச்சியினங்களுடன் ஒப்பிடும்போது, தட்டான்களின் பார்வை மிகக் கூர்மையானது. எல்லாக் கோணங்களிலும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது அவற்றின் கூட்டுக் கண்கள். ஒவ்வொரு கூட்டுக் கண்ணிலும் சுமார் 30 ஆயிரம் லென்சுகள் உள்ளன. இந்தப் பார்வைத் திறன்தான் பிற பூச்சிகளின் இயக்கத்தைக் கண்காணித்து மோதாமல் இருக்க உதவுகின்றன.

# பெண் தட்டான்களைக் கவர்வதற்காக ஆண் தட்டான்கள் கடுமையாக மோதிக்கொள்ளும். ஒரு இடத்தில் வசிக்கும் ஆண் தட்டான் பூச்சி வேறு இடத்திலிருந்து வரும் ஆண் தட்டானை தனது எல்லைக்குள் வர அனுமதிக்காது.

# தட்டான்களில் சில இனங்கள் இடம்பெயரும் வழக்கம் உள்ளவை. பருவ நிலைகளுக்கு ஏற்ப இடம் மாறும்.

# சராசரியாக தட்டான் பூச்சிகளின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான். அதிலும் சிறகுகள் முளைத்த பருவத்தில் நாம் பார்க்கும் தட்டான்பூச்சி அதன் பிறகு சில மாதங்களே உயிருடன் இருக்கும். பருவ நிலை வெதுவெதுப்பாகவும் உலர்வாகவும் இருக்கும் காலத்தில் கூடுதல் நாட்கள் உயிர் வாழும்.

Tuesday, September 16, 2014

விக்கல்...

சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள்நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.

என்ன காரணம்?
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது,மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும்விக்கல் வரும்.இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி.

உதாரணத்துக்கு,
இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு,நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

நிறுத்த என்ன செய்வது?
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது.
ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல்நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார்.

Sunday, September 14, 2014

நமது உடல்

நம் உடலை பற்றி அறிவோம்:-

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக்
குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம்
அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின்
மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம்
செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040
முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689
முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும்
செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும்
ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள
வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள
பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள்
மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும்
அளவிற்கு மனித உடலில் கார்பன்
சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல்
நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது,
இது காண்டாமிருகத்தின் கொம்புகளில்
காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட நகம்
ஒன்றுமே ஆகாது.

Saturday, September 13, 2014

வௌவால்கள்

# வௌவால் முதுகெலும்புள்ள பாலூட்டி.

# பாலூட்டிகளில் பறக்கும் இயல்புள்ள
ஒரே பிராணி வௌவால் மட்டுமே.

# வெளவால்களில் உலகம் முழுவதும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

# எலி, நரி போலவே சிறிய முகத்தைக்
கொண்டவை வௌவால்கள்.

# ஆந்தைகளைப் போலவே இரவில்தான்
வௌவால்கள் உற்சாகமாக இருக்கும்.

# வௌவால்களுக்குக் கண்கள் உண்டு.
பார்வைத் திறனும் உண்டு. ஆனால் அவற்றின்
கண்கள் பெரிதாக வளர்ச்சி அடையாதவை.

# இரவில் பறக்கும்
போது அவை மீயொலி அலைகளை அனுப்பும்.
அந்த ஒலி அலைகள் எதிரில் இருக்கும் சுவர்
அல்லது பொருட்களில் மோதித் திரும்ப
வருவதைக் கணக்கிடும்
தகவமைப்பு அதற்கு உண்டு. இத்தகவமைப்பின்
மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள்
இருக்கும் தூரத்தைக் கண்டுபிடிக்க
முடியும்.

# பூச்சிகள், மீன்களை உணவாக உட்கொள்ளும்.
சிலசமயம் பழங்களையும் சாப்பிடும்.

# வௌவால்களில் ரத்தக்
காட்டேரி வகை வௌவால்கள் சிறிய,
கூர்மையான பற்களைக் கொண்டவை.
விலங்குகளின் தோலைத் துளைத்து ரத்தம்
குடிக்கும் வல்லமை கொண்டவை.

# வௌவால்களில் உலகம் முழுவதும் அதிகம்
காணப்படும் இனம்
பழம்தின்னி வௌவால்களே.

# வௌவால்கள் பகல் முழுவதும் தலைகீழாகத்
தன் இருப்பிடத்தில்
தொங்கிக்கொண்டிருக்கும். இரவுதான்
அது பல இடங்களுக்குச்
சென்று இரை தேடும்.

# பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும்,
பழவிதைகளை வெவ்வேறு இடங்களில்
தூவி தாவரங்கள் பெருகுவதற்கும்
வௌவால்கள் உதவுகின்றன.

# காடுகள், குகைகள், நதியோரங்கள்,
நகரங்களில் உள்ள பழைய கட்டிடங்கள்
ஆகியவைதான் வௌவால்களின்
வாழ்விடங்கள். அருகில் நீரும், உணவும்,
இரையும், பாதுகாப்பும்
இருப்பதை வெளவால்கள்
உறுதி செய்து கொள்ளும்.

# நீர்ப்பாதைகளில் பயணம் செய்யும்போது,
வௌவால்கள் தடங்கல்கள்
ஏதுமின்றி தனது மீயொலி அலைகளை அனுப்பி எதிரே இருப்பதைத்
தெரிந்துகொள்ள முடியும். மனிதர்கள்
பயன்படுத்தும்
சாலை வழிகளை வௌவால்கள்
தேர்ந்தெடுப்பதில்லை.

# கூட்டம் கூட்டமாக
வாழ்பவை வௌவால்கள்.

# வௌவால் மணிக்கு ஆயிரம் சிறுபூச்சிகள்
வரை சாப்பிடும். வயல்களைத் தாக்கும்
பூச்சிகளை அழிப்பதால் விவசாயியின்
நண்பனாக வௌவால் உள்ளது.

# சிறகுகள் மட்டும் ஆறடி கொண்ட
வௌவாலும் உண்டு. ஒரு சிறு நாணயம்
அளவுக்கே உள்ள சிறிய வௌவாலும்
உண்டு.

# வௌவால்கள் பெரும்பாலும்
பறவைகளுடன் மோதுவதில்லை. பறவைகள்
வாழும் இடத்தில் இருப்பதுமில்லை.

# பெண் வௌவால்கள்
கோடைக்காலத்தில்தான் கர்ப்பம் அடையும்.
கரு வளர்வதற்குப் போதுமான
சத்து கிடைக்கும் காலம் என்பதால்
கோடைக்காலத்தில் பெண் வௌவால்கள்
கருவுறுகின்றன.

# பெண் வௌவால்கள் எல்லாம்
சேர்ந்து பேறுகாலக்
குடியிருப்பு ஒன்றைத்
தனியே உருவாக்கிக்கொள்ளும்.

# சிசுவாகப் பிறக்கும்
வௌவாலுக்கு முதலில் சிறகுகள்
இருக்காது. ஆனால் பிறக்கும்போதே 22
பற்கள் முளைத்திருக்கும். பிறந்த
இரண்டே மாதத்தில் முதிர்ச்சியுற்றுப்
பறக்கவும் தொடங்கும்.

# வெளவால்களின் சராசரி ஆயுள்காலம் 20
ஆண்டுகள்.

இபின் பதூதா

மொராக்கோவைச் சேர்ந்த இபின்
பதூதா (1304 -1377) இஸ்லாமிய
உலகமெல்லாம் சுற்றி வந்த மாபெரும் பயணி.

30 ஆண்டுக் காலம் பயணியாய், இரு கண்டங்கள்,
44 நாடுகளில் பனி உறைந்த மலைகள்,
சுட்டெரிக்கும் சகாரா மணல், நைல் நதியின்
வெள்ளம், கொந்தளிக்கும் கடல்
என்று கடந்து வந்தவர். யுவான் சுவாங் போல
மூன்று மடங்கு பயணித்தவர்.

“மாபெரும் பறவையின் சிறகின்
மீது இருப்பதாகக் கனவு கண்டேன்;
அது என்னுடன் மெக்காவின் திசைவழியில்
பறந்து பின்னர் ஏமனை நோக்கிச் சென்றது...
இறுதியில்
கிழக்கினை நோக்கி நீண்டு பயணித்து,
பசுமையும் இருளும் கொண்ட நாடொன்றில்
இறங்கி என்னை அங்கே விட்டுச்சென்றது”
என்று பதூதா தன் குறிப்புகளில்
எழுதுகிறார். நைல் நதியின்
டெல்டா பகுதிக் கிராமம் ஒன்றில்
இருந்தபோது அவரது பதிவு இது.
அவரது பயணம் பிரம்மாண்டமான பறவையுடன்
சென்ற பயணமாகவும், பிரம்மாண்டமான
பறவையின் பயணமாகவும் இருக்கிறது.
“ஒரு பறவை தன்
கூட்டிலிருந்து சிறகடித்துச்
செல்வதுபோல், புனிதத் தலங்களைத்
தரிசிக்கும் வேட்கையுடனும்
உறுதியுடனும், உற்றார்
உறவினிடமிருந்து பிரிந்து புறப்பட்டேன்.”
இப்புறப்பாடு அவரது 21 வது வயதில்.
பயணம் தொடங்கியது

ஷேக்அபு அப்துல்லா முகம்மது இபின்
அப்துல்லா இபின் முகம்மது இபின் இப்ரஹிம்
அல்-லாவதி என்னும் முழுப் பெயருடைய
இபின் பதூதா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ்
நகரிலிருந்து மெக்காவிற்குப் புனிதப்
பயணம் மேற்கொள்ளத் தொடங்குகிறார்.

வழக்கறிஞர் குடும்ப மரபில் வந்தவராதலால்,
மெக்காவில் சட்டத்
துறை அறிவை மேம்படுத்திக்கொள்ளும்
ஆசையைக் கொண்டிருந்தார்.
டுனிஷ், அலெக்ஸாண்டியா, கெய்ரோ,
பெத்லகேம், ஜெருசலேம், டமாஸ்கஸ்,
பாரசீகம், பாக்தாத், ஏமன், ஓமன், ரஷ்யா,
ஆப்கானிஸ்தானம்,
இந்தியா என்று அவரது வழித்தடம்
விரிந்துகொண்டே போகிறது.

இதற்கிடையே மூன்று முறை ஹஜ் பயணம்
மேற்கொள்கிறார். இரண்டாண்டுகள்
மெக்காவில் தங்கிச் சட்டம் படிக்கிறார்.
30 ஆண்டுகள் பயணிக்க
ஒருவருக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள்
இருக்க வேண்டும்! ஆனால் பதூதாவைப்
பொறுத்தவரை அப்படி இல்லை.

சாதாரண
குடும்பத்தவரான பதூதாவுக்கு, ஓர் அறிஞர்
என்ற வகையில் அவர் செல்லும் நாடுகளின்
மன்னரெல்லாம் உதவுகின்றனர். ஒரு மன்னர்
குதிரையும் இரு தங்க நாணயங்களும்
அளித்தால் இன்னொருவர்
பட்டாடை அணிவித்துப் பல்லக்கில்
அழைத்துச் செல்கிறார். அரண்மனையில்
தங்கி எவ்வளவு நாட்களையும்
கழித்துவிடலாம்.

இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆட்சிக்
காலத்தில் வந்த அவர், ஏழாண்டுகள்
நீதிபதியாக இருந்திருக்கிறார்.
மாலத்தீவுகளில் 18 மாதங்கள் நீதிபதியாகப்
பணியாற்றியிருக்கிறார். துக்ளக்கின்
தூதுவராகப் பெரும் பரிவாரம், பரிசுப்
பொருட்களுடன் சீனம்
சென்று வந்திருக்கிறார்.

இந்தியா வருகை
இந்துகுஷ் மலைகள் பனி மூடியிருக்க,
பனி உருகுவதற்காக 40 நாட்கள்
காத்திருந்து, பின் இந்தியா வந்து சேரும்
பதூதா, துக்ளக்கை அவமதித்த
ஒரு சூபி ஞானியைப் பார்த்து வரவே,
துக்ளக்கின் கோபத்திற்குள்ளானார்.
ஐந்து நாள் சிறைவைக்கப்படுகிறார்.

குரான் ஓதியவாறு உண்ணாநோன்பிருக்க,
மன்னரால் விடுவிக்கப்பட்டார்.
சூபி ஞானியோ தூக்கிலிடப்படுகிறார்.

லடாகியா என்னும் பகுதியில் தூக்குத்
தண்டனை நிறைவேற்றுவதில்
ஒரு புதிரான
நடைமுறை இருப்பதை பதூதா ஓரிடத்தில்
குறிப்பிடுகிறார். தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்டவனுக்குத்
தண்டனையைத் தெரிவிக்க வரும் பணியாளர்
முதலில் தகவலைத்
தெரிவிக்காது மன்னரிடம் திரும்பிப்
போவாராம். இப்படி மூன்று முறை அவர்
சென்று வந்த பின்பே,
தண்டனை நிறைவேற்றப்படுமாம்.

ரஷ்யாவில் ஆடுமாடு திருடிவிடும்
ஒருவன், மேலும் ஒன்பது கால்நடைகளுடன்
திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவனால்
அப்படிச் செய்ய
முடியாது போகும்பட்சத்தில், அவன்
வாரிசுகள் அடிமைகளாகிவிடுவார்கள்.
அவனுக்கு வாரிசுகளும் இல்லையென்றால்,
ஆடென அறுக்கப்பட்டுவான்.
இவ்விரு தண்டனைகளும்
கடுமையானவை என்ற போதிலும்
நடைமுறைப்படுத்துவதில்
கருணை காட்டப்படுவதற்கான தோற்றம்
இருக்கும்.

சீனாவைப் பார்த்துவிட்டு அவர்
பதிவுசெய்திருப்பதில் நல்லதும்
கெட்டதுமான அம்சங்களாகச் சேர்ந்திருப்பதும்
சுவையானது.

சீனர்கள் இந்துக்களைப்போலச்
சிலைகளை வணங்கி,
இறந்தவரை எரியூட்டுவதாக அவர்
குறிப்பிடுகிறார்.

21 வயதிலேயே சொந்த ஊரை விட்டுக்
கிளம்பி 30 ஆண்டுகளைப்
பயணத்திலேயே கழிக்கும் பதூதாவின்
குடும்ப வாழ்வு எப்படி இருந்தது? பயணத்
தொடக்கத்தில் டுனிஷ் நகரில்
மணந்துகொள்ளும் அவர்
அங்கங்கே அடுத்தடுத்து மணம்புரிவதும்
விவாகரத்து செய்வதுமாக இருக்கிறார்.
மாலத்தீவில்
மட்டும் ஆறு முறை மணம் செய்துள்ளார்.

ஆபத்து நிறைந்த தன் பயணத்தின்
வழியிலேயே மரணம் வாய்த்துவிடக்கூடும்
என்பதை உணாந்திருக்கிறார். “கடவுள் என்
சாவுக்குக் கட்டளையிட்டுவிட்டால், என்
முகம் மெக்காவை நோக்கிய பாதையில்
இருக்க வேண்டும்” என்று மட்டும்
விரும்பியிருக்கிறார்.

பதூதா தன் பயண வழியில் தரிசித்த முக்கிய
இடம் மௌலானா ரூமியின் நினைவிடம்
உள்ள கொன்யா நகரம். ஆடலும் பாடலுமாகச்
சூறாவளியெனச் சுழன்றாட மயக்க
நிலையில் அனுபூதியைத்
தொட்டுவிடும்
மார்க்கத்தை வற்புறுத்தியவர் ரூமி. இந்த
மார்க்கத்தில் பதூதாவுக்கு அலாதியான
பற்றுதல்.

பதூதா 1354-ல் தாயகம்
திரும்பி இறுதி ஆண்டுகளைச் சட்ட
வல்லுநராகக் கழித்திருக்கிறார். அவர் இறந்த
ஆண்டு 1369 அல்லது 1377 என்பதில் குழப்பம்.
அது போலவே அவரது கல்லறை டாஞ்சியர்ஸில்
இருக்கும் இடம் எது என்பதிலும் குழப்பம்.
ஆனாலும் என்ன?
அனுபவக் குறிப்புகள்
பயணங்களை முடித்த பின் தன் மாணவன்
ஒருவனிடம் தன் அனுபவங்களை எடுத்துக்
கூறி அவனை எழுதுமாறு செய்வித்துக்
கிடைத்திருப்பதுதான் பதூதாவின் பயணக்
குறிப்புகள்.

“நம் காலத்தின் மாபெரும்
பயணி இந்த ஷேக் என்று ஒப்புக்கொள்ளாத
அறிவார்த்த வாசகன் யாருமில்லை.
இஸ்லாத்தின் மிகப் பெரிய பயணி இவர்
என்று யாரேனும் கூறினால்
அது பொய்யில்லை” என்று அந்தக்
குறிப்புகள் முடிகின்றன.
மார்க்கோபோலோவின் பயணக்
குறிப்புகளில்கூடச் சந்தேகங்களும்
குழப்பங்களும் உண்டு. ஆனால் பதூதாவின்
குறிப்புகள்
துல்லியமானவை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“வாழ்வென்பது தூய சுடர்,
நமக்குள்ளேயிருக்கும் புலப்படாத
சூரியனால் நாம் வாழ்கிறோம்” என்பார்
தாமஸ் பிரவுன். அத்தகைய சூரியன்
பதூதாவுக்குள்
கனன்றுகொண்டிருந்திருக்க வேண்டும்.