Wednesday, September 10, 2014

Piggy bank

உங்களுக்குக்
காசு சேர்த்து வைப்பது என்றால் ரொம்பப்
பிடிக்கும் அல்லவா?

இதுக்காக உங்கள் அம்மா,
அப்பா உண்டியல்கூட வாங்கிக்
கொடுத்திருப்பார்கள். அது பெரும்பாலும்
களிமண்ணால் செய்த உண்டியலாக இருக்கும்.
இல்லையென்றால் பிளாஸ்டிக், தகரத்தில்
செய்த உண்டியலாகக்கூட இருக்கும்.

ஆனால்
இப்போது குழந்தைகளுக்காகவே பன்றிக்குட்டி உருவத்தில்
செய்யப்பட்ட விதவிதமான உண்டியல்கள்
கடைகளில் நிறைய விற்கப்படுகின்றன.
இதை ‘பிக்கி பேங்க்’ என்று சொல்கிறார்கள்.

பிக்கி பேங்க் எனப்படும் இந்த உண்டியல் ஏன்
பன்றியின் வடிவில் உள்ளது?
என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

அதற்குக் காரணம் இருக்கிறது. சுமார் 400
ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில்
மண்குடங்களும், சட்டிகளும் ‘பிக்’ (pygg)
எனப்படும் ஒருவித
களிமண்ணாலேயே செய்யப்பட்டன.
சில்லறைக் காசுகள் வீட்டில் இருந்தால்
அம்மா என்ன செய்வார்?
ஏதாவது ஒரு பாத்திரத்தில்
போட்டு வைப்பார்தானே?
அதுபோலவே அந்தக் காலத்திலும்
அவசரத்துக்கு உதவும் என்று காசுகளைப்
பாத்திரத்தில் போட்டு வைப்பது வழக்கம்.
இப்படி காசுகளைப் பாத்திரத்தில்
சேர்த்து வைப்பதை ‘பிக்கி பேங்க்’ (Piggy
Bank) என்று அழைத்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு குயவரிடம் `பிக்
பேங்க்’ செய்யுமாறு கூறியிருக்கிறார்கள்.
அதாவது, காசு சேமிக்க களிமண்ணில்
பாத்திரம்
செய்து தரும்படி சொல்லியிருக்கிறார்கள்.
அந்தப் பழக்கத்தை அறியாத குயவர், அதைத்
தவறாகப் புரிந்துகொண்டார்.
பன்றி வடிவத்தில் ஒரு களிமண்
பொம்மை செய்து, அதன் முதுகில் நாணயம்
போட ஒரு துளை அமைத்தார்.
அதிலிருந்து பிக்கி பேங்க்
வழக்கத்துக்கு வந்தது.

ஆனால், பன்றி உருவ
உண்டியலுக்கு இன்னொரு காரணமும்
கூறப்படுகிறது. பன்றிகளை வளர்ப்பவர்கள்
அவற்றுக்கு அதிகம் உணவு கொடுப்பார்கள்.
மாத இறுதியில் அவற்றைத் தேவைக்குப்
பயன்படுத்திக் கொள்வார்கள். அதுபோல நாம்
பணத்தை பிக்கி பேங்க் உண்டியலில்
போட்டு வைத்தால், சேமிப்பு ஒரு நாள்
பன்றி போலவே உபயோகமாக இருக்கும்
இல்லையா? இதைக் குறிக்கும்
வகையிலேயே ‘பிக்கி பேங்க்’ உண்டியல்கள்
பன்றி உருவத்தில் இருப்பதாகவும்
கூறுகிறார்கள்.

சேமிப்பு ஒரு நல்ல பழக்கம். அதைச்
சிறு வயதிலேயே கற்றுக்கொள்வது அவசியம்.
சிறு துளி பெரு வெள்ளம்
என்று சொல்வதைப் போலச் சிறுகசிறுக
நீங்கள் சேமிக்கும் காசுகள், உங்களுக்கோ,
உங்கள் அம்மா, அப்பாவுக்கோ தக்க சமயத்தில்
உதவியாக இருக்கும் அல்லவா?

No comments:

Post a Comment