Friday, August 15, 2014

படித்ததில் பிடித்தது

கர்நாடகா :

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்குமான
உறவு அடிக்கடி காவிரி நீரால் சலசலக்கும்.
ஆனால் தாய்மொழியை நேசிப்பதிலும்,
தலைசிறந்த இலக்கியவாதிகளை ஆராதிப்பதிலும் கன்னடர்களுக்கு இருக்கிற அக்கறை கண்டு இந்தியாவே கைகுவிக்கும்.

சான்றுக்கு சமீபத்தில் நடந்த சரித்திர சம்பவங்கள் இரண்டு.

கர்நாடகத்தின் முதல்வராக
அறிவிக்கப்பட்டதுமே, சித்தராமய்யா முதலில் சந்தித்தது - கன்னட தேசியக் கவிஞர் சிவருத்ரப்பாவை.

அடுத்துப் பார்த்தது -
ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரை.

அப்புறம் சென்றது - ஞானபீட
விருது பெற்றவரும், அரசியல் விமர்சகருமான
யு.ஆர்.அனந்தமூர்த்தியைச் சந்திக்க.

கன்னட இலக்கியப் பிதாமகன்களின் இல்லம் சென்று முதல்வர் செய்த ’முதல் மரியாதை’ கண்டு மாநிலமே மெய்சிலிர்த்து மெச்சியது.

அடுத்தது - சமீபத்தில் வயோதிகத்தால்
முதுபெரும் கவிஞரான சிவருத்ரப்பா காலமானார். அவர் மறைந்த
துக்கத்தை மாநிலமே அனுஷ்டிப்பதற்காக, அன்றைய நாளை அரசு விடுமுறையாக அறிவித்தது கர்நாடக அரசு.

படைப்பாளிகளுக்கு கன்னடர்கள் செய்த
கௌரவத்தை எண்ணிப் பாருங்கள், ஆனந்தக் கண்ணீர் பொங்கும்.

அப்படியே ஒருநொடி நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்தால்... அதே கண்களில் ஆற்றாமை கலந்த உப்புநதி வழியும்.

மறக்காமல் சொல்ல வேண்டிய
மற்றொரு செய்தியும் உண்டு. அது,
தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதை, இந்தியாவிலேயே அதிகம் பெற்றவர்கள் கன்னட
எழுத்தாளர்கள்தான்.

விருதுகளில் மட்டுமல்ல... புத்தக விற்பனையிலும் வரலாறு படைப்பவர்கள் இங்குள்ள
எழுத்தாளர்கள். பிரபல எழுத்தாளர்
எஸ்.எல்.பைரப்பா எழுதிய ’யாணா’ நாவல், வெளியான முதல் நாளிலேயே பத்தாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. பதிப்பாளர் வீட்டுப் பரணில் கிடக்கவிடாமல், பாய்ந்து சென்று வாங்கி நூலுக்கு வெற்றிப்
பரணி பாடிய கன்னட வாசகர்களின்
வாசிப்பு ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

வசீகரிக்கிற இயற்கை எழில்... வரலாற்றுச் சின்னங்கள்... வணங்க வேண்டிய திருத்தலங்கள்
என, வந்து குவிகிற சுற்றுலாப்
பயணிகளை சொக்க வைக்கிற சொர்க்க
பூமி கர்நாடகம்.

கன்னட மொழியோ, நம் கன்னித்தமிழைப் போலவே மிகத்
தொன்மையான மொழி என்ற பெருமையைப் பெற்றது.
‘தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னட மொழி என்று சொல்வதைவிட, தமிழின் உடன்பிறந்தவள் என்று இம்மொழியைச் சொல்வதே சாலப் பொருத்தம்’ என்கிறார் மொழியறிஞர் தேவநேயப் பாவாணர்.

தமிழில் புழக்கத்தில் இல்லாத அரிய பல தமிழ்ச் சொற்கள், காதுகளில் தேன் பாய்ச்சியபடி கன்னடத்தில்
கம்பீர உலா வருகின்றன.

’இறங்குங்கள்’ என்பதற்கு கன்னடத்தில் ’இளி’ என்கிறார்கள். கம்பராமாயணத்தில் ஏறிப் பார்த்தால் இந்தச் சொல்லை எட்டிப் பிடிக்கலாம்.

அரசனாக ஆகியிருக்க வேண்டியவன்
நாடு துறந்து காடு நோக்கிப் போவதைக்
காணும் குகன் கண்ணிலிருந்து நீர்
இறங்கி ஓடுகிறது. ‘இழி புனல்
பொழி கண்ணான்’ என்று அதைச் சித்திரச் சொல்லில் எழுதுகிறான் கம்பன். அந்த இழி’தான் ’இளி’யாகி (’று’ என்ற மரியாதை விகுதி சேர்ந்து) இன்றும் அங்கே இனிக்கிறது’ என்கிறார் ஒரு ஆய்வாளர்.

’மைசூரின் புலி’ என்று போற்றப்பட்ட
மாமன்னன் திப்புசுல்தான் ஆண்ட மண் இது. அதனாலே என்னவோ, தாய்மொழியைக் காக்க
புலிப்பாய்ச்சல் பாய்கிறார்கள் கன்னட
மைந்தர்கள்.

‘கர்நாடகத்துக்கு வந்து வசிக்கிறவர்கள் யாரானாலும் அவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ளவேண்டும்; கட்டாயம்
கன்னடத்தில் பேசவேண்டும்’ - கன்னட நாள் விழாவில் சொன்னவர், கர்நாடக முதல்வர் சித்தராமய்யா. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே!

பெங்களூருவில் GBKM என்ற இயக்கம் பிரபலம். இந்த எழுத்துக்களின் அர்த்தம் ‘காஞ்சலி பிடி, கன்னட மாத்தாடி’.

தமிழில் சொன்னால்,
‘பிறமொழி பாசத்தைக் கைவிடுங்கள்;
கன்னடத்தில் பேசுங்கள்’. கன்னடத்தில்
பேசுவதற்கான வகுப்புகளை நடத்துவது,
பொது இடங்களிலுள்ள அறிவிப்புகள், பெயர்ப் பலகைகளில் கன்னடம் இடம் பெறச் செய்வது போன்றவையே இந்த அமைப்பின் தீவிரப் பணி.

கர்நாடகத்தின் முதலமைச்சர் தொட்டு கடைசிக் குடிமகன் வரை சகலரிடமிருந்தும், கலப்படமில்லாத தாய்மொழிப் பற்றையும்,
இலக்கிய பிரம்மாக்களை கௌரவிக்கிற
பண்பையும் நம் இனிய தமிழ் மக்கள்
இனியேனும் கற்கவேண்டும்.
தயாரா தமிழினமே?

No comments:

Post a Comment