Sunday, August 10, 2014

மனிதக்கணினி

அந்த குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர் . அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள்.
அவருக்கு அது வெறுத்திருந்தது.

சர்க்கஸ் பக்கம் போனார் எண்ணற்ற வித்தைகள் செய்வார்.
சிங்கத்தை அடக்குவார், கயிறு மீது நடப்பார் இன்னும் பலபல ஜாலியான மேஜிக்குகள் கூட காட்டுவார். அந்த சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது,

“அப்பா எனக்கும் எதாச்சும்
சொல்லித்தா !” என கேட்டதும்
கார்டுகளை வைத்து மேஜிக் செய்வதை சொல்லித்தர ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் தான் எல்லா கார்டுகளையும் மனப்பாடமாக ஒப்பிக்க ஆரம்பித்தாள். அப்பா அசந்து போனார் -காரணம் அந்த சுட்டிக்கு வயது மூன்று.

இனிமேல் சர்க்கஸ் வேண்டாம் என
முடிவு செய்து கொண்டு அந்த
தேவி பாப்பாவை தெருத்தெருவாக
கூட்டிப்போய் அவளின் அதிவேக
கணக்கு போடும் ஆற்றலை உலகுக்கு காட்டினார்.

“சின்னப்பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம் ” என பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தார்கள்.
போன இடத்தில் எல்லாம் அந்த பெண் பின்னி எடுத்தாள்.

மைசூர் அண்ணாமலை என கல்விக்கூடங்களில் இருந்து கேள்வி வருவதற்கு முன் பதில் வந்து விழ ஆரம்பித்தது.

வகுப்புகளுக்கு போகவே முடியவில்லை; வீட்டின் வறுமையை போக்க ஊர் ஊராக இதற்காக சுற்ற
ஆரம்பித்து அதுவே வாழ்க்கை ஆகிப்போனது.

அப்பொழுது தான் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு.

சுட்டிக்கு இப்பொழுது
வயது நாற்பத்தி ஆறு.

மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா- தெரியவில்லை

அந்தச் சுட்டியின் பெயர்..
சகுந்தலா தேவி எனும் மனிதக்கணினி...

9167486769200391580

98660927585380162483

10668014430862240712

651642793465704086709

65932792057674808067

900227830163549248523

8033574531693511190359

6577547340075681688305

6208210161291328455648

05780158806771.

என்கிற இந்த 201
இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது வர்க்க
மூலத்தை கேட்டார்கள்.

கணினி 13000 கட்டளைகளுக்கு அப்புறம் ஒரு நிமிடத்தில் பதிலை சொல்ல தயாரான பொழுது அந்த பெண் 546372891 என பத்து நொடிகள் முன்னமே சொல்லி விட்டாள்!

அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது

7,686,369,774,870 x 2,465,099,745,779
என இரு எண்களை பெருக்க சொல்லி லண்டனில் கொடுத்தார்கள்.

இருபத்தி எட்டு நொடிகள் - விடை வந்து விழுந்தது. கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் அந்த தேவி எனஅறியப்பட்ட சகுந்தலா தேவி .
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போய் அவரைப்பாரட்டினார் ஐன்ஸ்டீன்.

தான் பள்ளிக்கல்வி பெறா விட்டாலும் பல சுவையான நூல்களை பிள்ளைகளுக்காக கணிதத்தை எளிமையாக கதை வடிவில்
சொல்லும் வகையில் அமைத்தார்.

கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், ஆடுகிற விளையாட்டு, பார்க்கிற விஷயங்கள்
என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
கதையாக ஆக்க வேண்டும். அவர்கள் ரசிப்பார்கள் என்றவர் அவர்.

அவரிடம் ஒரு நூற்றாண்டின்
ஒரு தேதியை நீங்கள் சொன்னால்
உடனே அது எந்த கிழமை என பதில்
வந்து விழும்.

வேதநூல்களில் உள்ள கணிதத்தை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்கிற ஆசையில் நூறு ஏக்கர்
பரப்பளவில் அவர் துவங்க இருந்த வேத கணித பல்கலைக்கழகம் கடைசியில் அவரோடு காற்றில் கரைந்து விட்டது.

No comments:

Post a Comment