Friday, August 15, 2014

படித்ததில் பிடித்தது

சுதந்திர தின சிறப்புப் பக்கங்கள்...

அசாம் : கற்க வேண்டியது என்ன?

ஏழு சகோதரிகள் என்று ஒட்டு மொத்தமாகப் பொட்டலம் கட்டி ஓரு ஓரமாகத்தூக்கி வைத்து விட்டோம்.

எல்லாப் பிராந்தியங்களையும் பற்றிப் பேசுகிற ’ஜன கண மன’ வில்கூட அவர்களுக்கு நாம் இடமளிக்கவில்லை.

இத்தனைக்கும் 1906லேயே அசாமை ஒருதனிப் பகுதியாக அறிவித்து விட்டார்கள்.

(ஜனகணமன எழுதப்பட்டது 1911ல் அதை எழுதிய தாகூரின் வங்கத்திற்குப் பக்கத்து மாநிலம் அசாம்!)

ஓரங்கட்டப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஒருகாலத்தில் அசாம் பர்மாவின் பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆளுகைக்குக் கீழ் இருந்த
பகுதிகள் அதன் எல்லையில் இருந்தன. அன்றைய பர்மாவை ஆண்டவர்கள் வெள்ளைக்காரன் எல்லைக்குள் வாலை நுழைத்துப் பார்த்தார்கள். அடித்து நொறுக்கி கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டான் ஆங்கிலேயேன்.
அதையடுத்து அது இந்தியாவாயிற்று.

அசாமின் பேரழகு ஓர் ஆணழகு:

பிரம்மபுத்திரா. ஆணின் பெயரில் அமைந்த ஒரே நதி.16 கிலோமீட்டர் அகலத்தில் ஆண்டு முழுவதும்
பாய்ந்து கொண்டிருக்கிறது.

இமயத்திற்கும் மூத்தது இந்த நதி என்று புவியியலாளர்கள் சொல்கிறார். அதாவது இமயம் தோன்றியதற்கு முன்பிருந்தே இந்த நதி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

அசாமியர்களிடம் பேச ஆரம்பித்தால் அவர்களும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்தான்
ஆரம்பிப்பார்கள்.நாம் தீபாவளிக்கு முழுக்குப் போடுகிற நரகாசுரன் அவர்களது அரசன்தான்.

கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றபின்
அவனது மகன் பாகத்தன் அரசனானான் என்றும், அவன் பழிவாங்க கிருஷ்ணனுக்கு எதிரணியில்
நின்று கௌரவர்களுக்காகப் போரிட்டான் என்றும் புராணம் படிப்பார்கள்.

அசாமில் மாபெரும் சபைகளில் நாம் நடந்தால் மாலைகள் விழும் என உறுதியாய்ச் சொல்வதற்கில்லை. ஆனால் கழுத்தில் ‘கமோசா’ கண்டிப்பாய் உண்டு.
கமோசா என்பது சிவப்பு பார்டர் போட்ட
வெள்ளைக் கைத்தறித் துண்டு மதிப்பிற்குரியவர்களுக்கு அதை அணிவிப்பது மரியாதை செலுத்தும்
மரபின் அடையாளம்.
அதையடுத்து கௌபாய்களின் தொப்பியைப் போன்று அகலமான விளிம்பும் இறுக்கமான
தலைக் குழியும் கொண்ட ’ஜாபி’ என்ற
தொப்பியைச் சூட்டுவார்கள். பிரம்பும்
ஓலையும் கொண்டு பின்னப்பட்ட அந்தத் தொப்பி சொல் இல்லாமல் சூசகமாய்ச் சேதிகள் சொல்லும்.

சிவப்பு நீலம் ஆழ்ந்த பச்சை, கறுப்பு எனப் பலவண்ணத் துணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, அகலமான விளிம்பு கொண்டது என்றால் அது அரசனுக்குரியது. எந்த அலங்காரமும்
அற்ற எளிய ஓலைத் தொப்பி
சாதாரண மனிதர்களின் மகுடம். இதுவும் தொல்குடி நாகரிகத்திலிருந்து தொடரும் வழக்கம். அவர்களுக்கு அடையாளங்கள் முக்கியம். குலச் சின்னமும், குழுச்சின்னமும்
முக்கியம். அவர்கள் அணிந்திருக்கும்
ஆடையைக் கொண்டே எந்தக் குழு என்பதைக் கண்டு கொள்வார்கள். காரணம், அழகிய டிசைன்
என்று நாம் கருதிக் கொண்டிருக்கும்
கைவேலைக்குள் சிங்கம், டிராகன், பறக்கும் சிங்கம் எனக் குழுச் சின்னம் ஒளிந்திருக்கும்.

அவர்கள் பழமையில் வேர் கொண்டிருந்தாலும் நவீனத்தில் கிளை பரப்பியவர்கள். இன்று எழுதப்படும் அசாமிய மொழியின் நவீன
வடிவத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள்
அமெரிக்கப் பாதிரிமார்கள். அதை அசாம் மட்டுமல்ல, நாகாலாந்து, அருணாசலபிரதேசம், மேகாலாயவும் கூட ஏற்றுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கின்றன.
சந்தாலி என்ற பழங்குடி மொழியை லத்தீன் எழுத்துக்களைக் கொண்டு எழுதி வந்தார்கள்.

2008லிருந்து தனி வரிவடிவம்
கண்டு அதற்கு யூனிகொடு என்ற
கணினி குறியீட்டு முறையையும்
உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள்.
குவாஹத்தியின் கடைவீதியில்
காலை வீசி நடை போட்டால் நவீன வகைக் கட்டிடங்கள், உணவு, கார், ஸ்மார்ட் போன், பிளாஸ்டிக், நவீன நகரங்களுக்கே உரித்தான மாசுபட்ட காற்று எல்லாவற்றையும் எதிர்
கொள்ளலாம்.

நவீனத்தை நிராகரித்துவிடாமல், அதே நேரம் அடையாளங்களை அடைகாத்துக் கொண்டு வாழும் அசாமியத்தொல்குடியிடமிருந்து தமிழ்க்குடி வரித்துக் கொள்ள வேண்டிய
ஒன்றுண்டு. அது: மரபை மறக்காதிருத்தல்.

No comments:

Post a Comment